Friday, July 25, 2014

தெய்வாதீனம் 4: எதிர்பாரா சந்திப்பா? இறைவன் திட்டமா?- 2


1990-ஆம் ஆண்டு நாங்கள் டெக்ஸஸ் மாகாணத்தின் தலை நகரமாகிய ஆஸ்டினில் இருந்தோம்.  நான் ஒரு civil engineering கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.  எங்கள் மகள் (சௌமியா) டெக்ஸஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்பு படித்துக் கொண்டிருந்தாள்.  அவளும் அவளைப் போல், இங்கு வளர்ந்து, இளங்கலை வகுப்பிலிருந்த வேறு சில இந்திய மாணவர்களும் சேர்ந்து, புதிதாக இந்தியாவிலிருந்து படிக்க வரும் மாணவர்களுக்கு உதவியாக ஒரு வரவேற்புக் குழு அமைத்திருந்தனர்.  அவர்கள் செயல் பட்ட விதம் பல்கலைக்கழக அயல்நாட்டுமாணவர்கள் இலாகாவே செய்ததுபோல் இருந்தது.

இப்பொழுதெல்லாம் கணினித்துறை வளர்ச்சியினால் பலரும் அமெரிக்காவுக்கு வேலை செய்ய நேரடியாக வருகிறார்கள்.  தொண்ணூறுகளுக்கு முன்னே மருத்துவர்களைத் தவிர மற்றவர்கள் வேலை செய்ய நேரடியாக வர முடிந்ததில்லை.  மேற்படிப்புக்கு வந்து பிறகு வேலை கிடைத்துத் தங்கினவர்கள் தங்குவார்கள்.  சிலர் இந்தியா திரும்பிவிடுவார்கள்.

அப்படி M. B. A. படிக்க வந்தவர்களுள் வெங்கடேசும் ஒருவர்.  அவர் ஆஸ்டின் வந்து இறங்கியதும் அவரை வரவேற்க (அவர் எதிர்பார்த்த) நண்பர் விமான நிலையத்திற்கு வரவில்லை. நல்லகாலம் வெங்கடேசிடம் சௌமியா குழுவிடமிருந்து வந்த கடிதமும், அதில் எங்கள் வீட்டு தொலைபேசி எண்ணும் இருந்தது.  இரவு 11 மணிக்கு விமான நிலையத்திலிருந்து ஃபோன் வந்தது.  தங்குவதற்கு இடமில்லாமல், வெங்கடேசன் அன்றிரவு எங்கள் வீட்டில் தங்க நேர்ந்தது.

மறுநாள், நான் அவரை அழைத்துச் சென்று, வங்கிக் கணக்கு திறக்கவும், வாடகை வீடு தேடி அமைக்கவும் உதவினேன்.

மூன்றாம் நாள் காலை வென்கடேசனிடமிருந்து ஃபோன் வந்தது.

"சார், நான் உங்களுடன் பேச வேண்டும்".  சரியென்று போய் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தேன்.

"என்ன விஷயம்?"

"நான் எதிர்பார்த்தபடி இல்லை.  நான் இப்பவே திரும்பிப் போய்விடலாமென்று நினைக்கிறேன்"

"திரும்பிப் போனால் வேலை இருக்கா?  வந்ததுக்கும் திரும்பிப் போறதுக்கும் ஏர் டிக்கட் செலவுக்கு வாங்கிய கடனைத் தீர்க்க முடியுமா?"

அப்போதெல்லாம், விமானச் செலவுக்கு வாங்கிய கடனைத் தீர்க்க ஆயுள் முழுதும் இன்தியாவில் சம்பாதிக்கும் பணம் போதாது!

"இல்ல சார்.  ஏங் கம்பெனில எடுத்துப்பாங்க.  எல்லாம் யோசிச்சேன்.  கடன சமாளிச்சுடலாம்"

"வெங்கடேஷ்.  கொஞ்சம் இருந்து யோசிங்க.   இப்ப திரும்ப வேண்டிய அவசியம் என்ன?  ஒரு ஸெமஸ்டர் பாருங்க."

"சார் இங்க படிப்பும் ஒண்ணும் நான் நனச்ச மாதிரியா இல்ல.  ரொம்ப ஏமாற்றமா இருக்கு.  டயத்த வீணடிக்காம திரும்பிப் போறதுதான் சரின்னு படுது"

"வெங்கடேசன்! நீங்க இப்பதான் வந்திருக்கீங்க.  வந்த அலுப்பு, இட மாற்றம், சூழ்நிலை மாற்றம் எல்லாம் சேர்ந்து ஸ்ட்ரெஸ்ல இருக்கீங்க.  ஊர்ல அம்மா, மனைவி, குழந்தையப் பிரிஞ்சிரிக்கீங்க வேற.  இந்த மன நிலல நீங்க சரியா யோசிச்சு முடிவுக்கு வர நிலல இல்ல. நீங்க கொஞ்சநாள் - ஒரு ஸெமஸ்டர் பாத்துட்டு - 'சார்.  எல்லாம் நன்னாதான் இருக்குங்க.  ஆனாலும் இந்தப் படிப்பு ஒண்ணும் பிரயோசனப்படாது. திரும்பிப் போறதுதான் நல்லது'ன்னு உங்க மனசு தெம்பா இருக்கும்போது சொன்னா அதை எடுத்துக்கலாம்"

ஒருமாதிரி ஒப்புக் கொண்டு விட்டடவர் போல் தெரிந்தது.

ஒரு ஸெமஸ்டர் முடிந்த பின் ஒருநாள் ஃபோனில் "சார்.  நல்ல காலம் அன்னக்கி நான் உங்கள வந்து பாத்துப் பேசினேன்.  கொஞ்சம் கொஞ்சமா எல்லாம் புரிபடுது" என்று கூறி நன்றி தெரிவித்தார்.

பிறகு சில நாட்களில் தாய், மனைவி குழந்தையையும் அழைத்து வந்துவிட்டார்.  இன்னும் அமெரிக்காவில்தான் இருக்கிறார் -  ஒரு கல்லூரியில் பேராசிரியராக!




Thursday, July 17, 2014

தெய்வாதீனம் 3: எதிர்பாரா சந்திப்பா? இறைவன் திட்டமா?- 1

எப்படி நம் வாழ்வில் சில எதிர்பாரா விதங்களில் எதிர்பாரா மனிதர்கள் மூலம் இறைவன் வழிநடத்துகிறானோ அவ்வாறே நம்மையும் இறைவன் நகர்த்திச் சென்று இன்னொருவர் வாழ்க்கையில் நன்மை செய்யக் கருவியாக்குவதும் உண்டு.  அத்தகைய ஓரிரு நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நானும் என் மனைவியும் உடற்பயிற்சியை முன்னிட்டு, மாலை வேளைகளில் உலவி வருவோம்.  நகரத்தில் உள்ள பூங்காக்கள், நதிக்கரையோரப் பாதை போன்ற இடங்களில் பலரும் அவ்வாறு நடந்து கொண்டிருப்பார்கள்.

அப்படி 2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒரு மாலை உலாவி வந்துகொண்டிருக்கும் சமயம் சற்று உட்கார்ந்து விட்டுப் பிறகு மேலும் நடக்கலாம் என்று தோன்றியது.  அங்கிருந்த பல நீள் இருக்கைகளில் (benches) ஒன்றில் மட்டும் உட்கார இடமிருந்தது.  அதிலும் ஒரு மூத்த பெண்மணி இருந்தார்.  அவர் புடவை அணிந்திருந்ததால், நம் பக்கத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றவே, சற்றும் தயக்கமின்றி அங்கு போய் அமர்ந்தோம்.  என் மனைவி தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு பேச்சுக் கொடுத்தார்,  அவர்கள் வங்காளத்தச் சேர்ந்தவர்கள்.  கணவனும் புதிதாக மணம் புரிந்த மகன், மருமகளும் உலவச் சென்றிருப்பதாகவும், தனக்கு உடல் நலம் சரியில்லாததால் செல்ல முடியவில்லை என்றும் கூறினார்.  மகனுக்கு இங்கு (யூ. எஸ். ஏ யில்) வேலை.  புதிதாக மணமானதால், பெற்றொர் வந்திருந்தனர்; சில மாதங்களில் அவர்கள் கொல்கத்தா சென்றுவிடுவார்கள்.  அவர் மிகவும் பீணிக்கப்பட்டும் உடல் வலுக்குறைந்தும் காணப்பட்டார்.  சிறிது நேரத்தில் மற்றவர்களும் அங்கு வந்தனர்.  தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டு பிரிந்தோம்.

டிசம்பர் மாதம் மகரிஷி வேதாத்திரி அவர்களின் சீடர் ஒருவர் அட்லாண்டா (நாங்கள் இருக்கும் இடம்) வரும் செய்தி கிடைத்தது.  அவர் ஒரு வாரம் இங்கு இருந்து, விருப்பமுள்ளவர்களுக்கு மகரிஷியின் எளிய குண்டலினி யோகம் பயிற்றுவிக்கத் தயார் என்று தெரிந்தது.  அந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொள்ள நினைத்து, எங்கள் இல்லத்தில் ஏற்பாடு செய்தோம்.  அந்தப் பயிற்சிக்கு மேலே குறிப்பிட்ட புதிய வங்காள நண்பர்களையும் அழைத்தோம்.  பெரியவரும், மருமகளும் வர விருப்பம் தெரிவித்தனர். தாயால் வர உடல் நிலை அனுமதிக்கவில்லை.  மகனுக்கு அலுவல் நேரம் முடிந்து வர முடியாது.  எனவே நான் அவர்கள் வீட்டுக்குச் சென்று பெரியவரையும், மருமகளையும் கூட்டிவர, மகன் அலுவல் முடிந்து எங்கள் வீட்டுக்கு வந்து அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்வார்.

பிறகு, ஜனவரியில் அவர்கள் இந்தியா திரும்பு முன் ஒரு மாலை அவர்கள் வீட்டிற்கு எங்களை விருந்துக்கு அழைத்தனர்.  நாங்கள் சென்று விருந்துண்டு, சில மணி நேரம் அளவளாவி மகிழ்ந்து வீடு திரும்பினோம்.

அந்த மூதாட்டி மிகவும் சோர்ந்திருந்தார்.  இருந்தும் அவர்கள் எல்லோரும் சிறப்பாகவே விருந்தோம்பல் செய்தனர்.  எல்லொரும் (புதிய மணப்பெண் உட்பட) மகிழ்ச்சியாகவும், சகஜமாகவும் இருப்பதாகத் தெரிந்தது.

சிறிது நாட்களுக்குப் பின் என் மனைவி அந்தப் புதிய மணப் பெண்ணை தொலைபேசிஎயில் அழைத்துப் பேச எண்ணினார்.  அவள் மிகவும் இள வயதினராகவும், புதிய, பழக்கமில்லாத ஊருக்கு, மணமானவுடனே வந்திருப்பதனாலும் பெரியவர்கள் இந்தியா திரும்பி விட்டதனாலும் அந்தப் பெண்ணுக்கு ஏதும் உதவி வேண்டுமா என்று கேட்க எண்ணினார்.

ஆனால், விழுந்ததே இடி!

தொலை பேசி இந்தியாவில் பெரியவருக்குச் சென்றது.  அவர் அழமாட்டாக்குறையாகச் சொன்னது: அவர்களை விமான நிலையத்தில் வழியனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பிய மகனுக்கு ஒரு பேரிடி காத்திருந்தது.  அவரை போலீசார் கைது செய்து விட்டனர்!  அவர் மனைவி, மற்றொரு வங்காளி குடும்பத்தி்ன் உதவியுடன் போலீஸுக்குப் புகார் கொடுத்து, கணவனை வீட்டிற்குள் வர முடியாதவாறு செய்துவிட்டாள்.  அவர்கள் தன்னை கொடுமைப் படுத்துவதாகவும் அவரிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமெனவும் புகார்கள்!
இதைக்கேட்ட அதிர்ச்சியில், தாயாம் மூதாட்டி இறந்து விட்டார்.

அந்தப் பெண்னை வீட்டிலிருந்து எங்கும் வெளியேசெல்ல விடவில்லை;, அழைத்துச் செல்லவும் இல்லை என்பதும் ஒரு குற்றச்சாட்டு!

குற்றம் சுமத்தப்பட்ட இளைஞர் 2012 ஜூலை மாதம் தொலைபேசியில் கூப்பிட்டார்.  அவர் இங்கு வேலை இழந்து, ஃப்ளாரிடா சென்றிருந்தார்.  அவர் மீது மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக சுமத்தப்பட்ட 19 குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கில் நாங்கள் சாட்சி சொல்ல முடியுமா என்றார்.  இருவரும் சென்றோம்.  இந்த இடைக்காலத்தில் அவர் தந்தையாரும் இறந்துவிட்டிருந்தார்; மிகப் பண நஷ்டத்துடன், தாய் தந்தை இறந்தபோதும் வழக்கில் மாட்டிக் கொண்டிருந்ததால் இந்தியா சென்று வர முடியாமல் மனக்கஷ்டத்திற்கும் ஆளாகி மிகத் துன்பத்திற்குள்ளாகியிருந்தார்.

வழக்கு மன்றத்தில் என்னைக்கேட்டது வாதி, பிரதிவாதிகளை எனக்குத் தெரியுமா, எப்படி எவ்வளவு காலமாகத் தெரியும் என்பதே.  நான் அவர்கள் எல்லொரையும் பூங்காவில் முதலில் பார்த்தது, யோகப் பயிற்சிக்கு சில நாட்கள் பெரியவரும், வாதியும் வந்தது, பிறகு அவர்கள் வீட்டில் விருந்துக்குச் சென்றபோது எல்லோரையும் பார்த்துப் பேசியிருந்தது எல்லாவற்றையும் சொன்னேன்.

பிறகு சில நாட்கள் கழித்து அந்த இளைஞர் தொலை பேசியில் தான் முற்றிலும் நிரபராதி என்று தீர்ப்பளிக்கப்பட்டதாகவும் நான் கூறிய வாக்குமூலம் அந்தப் பெண் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதியின்றி கொடுமைப்படுத்தப்பட்டது பொய் என்பதைத் திட்டவட்டமாக்கியதுதான் முக்கிய காரணம் என்றும் கூறி நன்றி தெரிவித்தார்.  இதனால், அவருக்கு மேலும் பண நஷ்டம் இல்லாமல் போனது என்றும் கூறினார்.

பின்னோக்கிப் பார்க்கும்போது, நாங்கள் அவர்களை “அகஸ்மாத்”தாகச்
சந்தித்தது, எங்கள் வீட்டில் யோகப் பயிற்சிக்கு அந்தப் பெண்ணும் வந்தது, எல்லாமே அந்த இளைஞரை மிகப் பெரிய இக்கட்டிலிருந்து விடுவிக்கவென்றே இறைவன் திட்டமிட்டுச் செய்ததாகத் தோன்றுகிறது.

     ..................................................
    வல்லான் விதியே ஆடுமகன்;
     வலியில் மனிதர் கருவிகளாம்;
         சொல்லா தெங்கும் இழுத்திடுவான்,
     ஜோடி சேர்ப்பான், வெட்டுவான்,
..........................................
 -- ஒமர் கய்யாமின் ருபையத்/
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை மொழிபெயர்ப்பு
 


Tuesday, July 8, 2014

தெய்வாதீனம் 2: கடைசி நொடியில் கிடைத்த உதவித் தொகை.

அயல் நாடு சென்று பட்ட மேற்படிப்பு படித்து முனைவர் பட்டம் பெற்றுவிட வேண்டும் என்று ஒரு வெறி என்னுள் நுழைந்து விட்டது. அந்த வெறியில் நான் செய்த - இப்பொழுது நினைத்துப் பார்க்கையில்  அடி முட்டாள் தனமான - செய்கைகளும், கடைசி நிமிடத்தில் தெய்வீக அருள் வந்து காப்பாற்றியதையும் மறக்கவே முடியாது.

இந்த வெறிக்கு வித்திட்டவர் ஒரு கட்டட வேலை காவல்காரர்!  பள்ளி இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்பா சென்னையில் வீடு கட்டிக் கொண்டிருந்த சமயம்.  நானும், என் தம்பியும் அங்கு தினமும் சென்று வேடிக்கை பார்ப்போம்.  அப்படி ஒரு நாள் நான் அந்த இடத்தை நெருங்கும் போது கட்டடக் காவலர் “சின்ன ஐயா ஃபாரின் போய்ட்டு வரணும்” என்று சொன்னது காதில் விழுந்தது.  

பிறகு கிண்டி இஞ்சினீரிங் கல்லூரியில் 

 கிண்டி இஞ்சினீரிங் கல்லூரி

3-ம் ஆண்டு படிக்கும் போது இறுதி ஆண்டு மாணவர் இருவர் ஆஸ்திரேலியா சென்று திரும்பியது தெரிந்தது.  இதை ஒட்டி மேல் விவரங்கள் சேகரித்து, நானும் சக மாணவர்களில் ஒருவனான எஸ். வெங்கடேசனும், ஆஸ்திரேலியாவுக்குக் கப்பலில் போக ஏற்பாடுகள் செய்ய முயற்சிகள் எடுத்தோம். இடையில் நகரமைப்பு இயக்ககத்தில் வேலை கிடைத்து, ஐ. ஐ. டி. (கரக்பூர்) மேற்படிப்பு, திருமணம் இத்யாதி நடந்தேறின.  சென்னை பல்கலைக் கழக கட்டிடக் கலை மற்றும் நகரமைப்புப் பள்ளியில் உதவிப் பேராசிரியராகும் (1969) வரை வெளிநாடு போகும் எண்ணம் அமுங்கியிருந்தது.  வெங்கடேசனும் வேறு வழி சென்று விட்டான். 

சிறிது சிறிதாக, சென்னைப் பல்கலைக் கழகத்தில் எனக்கு வேலை திருப்தியும், முன்னேற வழியும் இல்லை என்ற நிலையும், பல முறை உயர் பதவி என்னைத் தாண்டி இளையவர்களுக்கும், குறைந்த அனுபவம் கொண்டவர்களுக்கும் செல்லவும், பழைய “வெறிக் கனல்” மூண்டெழுந்தது.  கடவுச் சீட்டுப் பெறுதல், மேற்படிப்பு அனுமதி பெற உதவும் பரீட்சைகள் (GRE, TOEFL) என்று ஒவ்வொன்றாக முடித்து, பல இடங்களுக்கும் மனு போட ஆரம்பித்தேன்.  

நார்த்வெஸ்டெர்ன் (Northwestern) பல்கலைக் கழகத்திலிருந்து (NU) 

பொறியியல் கல்லூரி
நார்த்வெஸ்டர்ன் பல்கலைக் கழகம், எவான்ஸ்டன், இல்லினாய்

அனுமதிக் கடிதம் வந்தது.  இங்குதான் அடிமுட்டாள்தனமெனக் கூறத்தகும் காரியத்தில் இறங்கினேன்:  என்னுடைய ஆயுள்காப்பீட்டையும், வீட்டையும் பாங்கில் அடகு வைத்து, சிகாகோ செல்லப் பயணச்சீட்டும் வாங்கி விட்டேன்.  “அங்கு” போன பிறகு உதவித் தொகை (assitantship) கிடைக்கும்; அது தாராளம் என்றெல்லாம் (தவறாக) நினைத்தேன்.

நல்ல காலம்!

ஆண்டவன் புண்ணியத்தில், பயணத்திற்கு இரண்டு நாட்கள் முன் NU  விலிருந்து பகுதி நேர ஆராய்ச்சி உதவியாளனாக மாதம் $350ம், கல்லூரி போதனை இலவசம் என்றும் தந்தி வந்தது!

”பல முறை தடுத்தேன்; இவ்வளவு பிடிவாதமாக, மனைவி, இரண்டு குழந்தைகள், திருமணத்திற்குக் காத்திருக்கும் தங்கை, கல்லூரிப் படிப்பு முடிக்காத தம்பி, வேலை ஓய்வு பெற்று கிராமத்தில் இருக்கும் தாய் தந்தை இவர்களையெல்லாம் மறந்து, இருக்கும் வேலையில் 6 மாத அரைச் சம்பள (ரூ. 450) விடுமுறையும், கையில் சொற்பக் காசும் ($80) கொண்டு என்ன தைரியத்தில் அமெரிக்கா போகிறாய்?  முட்டாளே! இந்தா உதவித் தொகை.போய் ஒழுங்காகப் படித்து வா” என்று கூறினது யார்?


ஆன்றோர் சொல்:

ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதாவது ஒரு முறை தெய்வீக ஆற்றல் வெள்ளமாகப் பாய்கிறது. மனிதராகப் பிறந்தவர் செய்ய வேண்டியதெல்லாம் கடமையை தன்னால் இயன்றவரை செவ்வனே செய்வதே - படகை கீழ் நோக்கி வரும் வெள்ளத்தை மீறி ஆற்றினுள் செலுத்துவது போன்று. கவனமாகவும், முழு அர்ப்பணிப்புடனும் கடமையைச் செய்து கொண்டிருக்கையில் தக்க சமயத்தில் திருவருள் பாலித்து எல்லா செல்வங்களும் வந்தடையும்.  --
ஸ்ரீமத் சுவாமி சித்பவாநந்தா. பகவத் கீதை அத் 2:32 விளக்கம்





Monday, July 7, 2014

தெய்வாதீனம் 1: வேலை கிடைத்தது



1988 ஆம் ஆண்டு டிசம்பரில் ஓர் இரவு. நான் 1986 ஆகஸ்ட் முதல் வேலை இல்லாமல் இருந்த காலம்.

ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் போக்குவரத்து ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி பொறியாளராக இருந்தவனை நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.   என் குழந்தைகள்
உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர். நான் ஆஸ்டின் கம்யூனிட்டி கல்லூரியில் பகுதி நேர ஆசிரியராகவும், வணிக பள்ளியில் (Business School) பகுதி நேர ஆராய்ச்சி உதவியாளராகவும் மற்ற சில உதிரி வேலைகளும் செய்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். நானும் என் மனைவியும்,  ஆராய்ச்சி பொறியாளராகப் பெற்ற சம்பளத்தில் கால் பகுதி வருமானத்தில் எப்படியோ சமாளித்துக் கொண்டிருந்தோம். எங்கள்  சேமிப்பு நிதி கரைந்து கொண்டிருந்தது. என் மனைவி (வேதா) எங்கள் வீட்டில் குழந்தைகள் காக்கும் பணி (baby sitting) செய்தும்,  குழந்தைகள் (ஸௌமியா, ப்ரபாகர்) கையில் கிடைத்த, பகுதி நேர வேலைகள் செய்யத் தொடங்கியதும் இந்தச் சமயத்தில்தான். இன்னும் ஒரு சில மாதங்கள் இப்படியே போயிருந்தால் நாங்கள் அமெரிக்க வாழ்க்கையைத் தொடர்வது பெரிய, தீர்க்க முடியாத பிரச்சினை ஆகி இருக்கும்!

இந்த சமயத்தில்தான் அந்த டிசம்பர் இரவு, நானும் என் மனைவியும் மளிகை வாங்க கடைக்கு சென்றோம். என் மனைவி பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கையில் நான் ஆழ்ந்த யோசனையும், கவலையுமாய் கடையில்
சுற்றிக் கொண்டிருந்தேன்.

ClydeLee.jpg.
முனைவர் க்லைட் லீ  (Dr. Clyde Lee)

அப்படி வரும்போது அங்கு டெக்சாஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் கிளைட் லீ இருப்பதைப்பார்த்தேன். "நல்ல மாலை Dr.Lee". "அடடே!  நீங்களா? என்ன சமாச்சாரம்? " " வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்! "பின்னர் அவர் தனது வழியில் செல்ல நாங்கள்  எம் வழியில் சென்றோம்.

- அடுத்த நாள் காலை, பிசினஸ் ஸ்கூலில் நான் இருக்கும் சமயம், முனைவர் ஜோ. டபிள்யூ. நீல் (Dr. Joe W. Neal, தலைவர் 1986-1995, டெக்சாஸ் சர்வதேச கூட்டமைப்பு  - http://www.tiec.org/about_index.html), என்பவரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

joeneal.jpg
முனைவர் ஜோ நீல்

"டாக்டர் லீ உங்களைக் குறிப்பிட்டார். மலேஷியாவில் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்குப் பொறியியல் ஆசிரியர் பதவிக்கு  ஆள் தேவை. நீங்கள் செல்லச் சம்மதமா? "  " விவரங்கள் சொல்லுங்கள்? "
"இன்று காலை 10 மணிக்கு மலேஷியா செல்ல தயாராக உள்ள ஆசிரிய உறுப்பினர்கள் குழுவுக்கு விவரங்கள் கூறும் தகவற் கூட்டம் வைத்திருக்கிறோம்.  வர முடியுமா?? "

நான் அங்கு சென்றேன். ஷா ஆலம், மலேஷியாவில்  மலேசிய மாணவர்களுக்கு அடிப்படை பொறியியல் படிப்புகள் கற்பிக்கும் வேலை. உதவிப் பேராசிரியர் பதவி. டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில்  அனுமதிக்கப்பட்ட மலாய் மாணவர்கள் (Bhumiputras என அழைக்கப்படும் சீன அல்லது இந்திய வம்சாவளி மலேசியர்களினின்றும் வேறுபட்ட, மலேஷியப் பூர்வ குடிமக்கள்). சம்பளம் ஆராய்ச்சி பொறியாளர் பதவியில் பெர்ற அளவுக்கும், மற்றும் பல perquisites சேர்த்து இருந்தது. நான் ஒரு வாரத்திற்குள் ஷா ஆலத்தில் பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்! முதலில் ஒரு செமஸ்டர் வய்ப்பாக இருந்தது ஆனால் அது 1988 இறுதிவரை நீட்டிக்கப்பட்டது. இரண்டாவது பாதியில் வேதாவையும் கூட்டிச் செல்ல முடிந்தது.  என் குழந்தைகள் தங்கள் கோடை விடுமுறைக்கு அங்கு வந்தனர்.

 ஆகஸ்ட் 1986-ல், இது போன்ற வாய்ப்புக் கிடைத்திருந்தாலும் என்னால் அதைப் பயன் படுத்திக் கொள்ள முடிந்திருக்காது. ஏனெனில் அப்போது குழந்தைகள் இன்னும் சிறார்களே. என் மகள் அப்போதுதான்  வண்டி ஓட்டும் தகுதி பெற்றிருந்தாள். என் மகன் இன்னும் அதற்கான வயதை அடைந்திருக்கவில்லை.  1988 ஆம் ஆண்டிலோ அவர்கள் தங்களை பார்த்து கொள்ள முடியும் என்ற நிலைமை அவர்களை விட்டு விட்டு நான் மலேஷியா செல்லும்  நம்பிக்கையைக் கொடுத்தது.

எனவே, சரியான சமயத்தில் நான் அந்த இரவு கடைக்கு சென்று டாக்டர் லீயை சந்திக்க நேர்ந்தது தெய்வாதீனம் என்று உறுதியாக  எண்ணுகிறேன்!

முன்னுரை:


God Revealed: Revisit Your Past to Enrich Your Future (Morgan James Faith) Paperback – February 2, 2014  by Fred Sievert (Author) என்ற புத்தகத்தைப் படித்த பொழுது என் கடந்த கால வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்கள் தெய்வாதீனமாக நிகழ்ந்தவையாகப் புலப்பட்டன.   அந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்தெழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.

சிறு பிள்ளையாக இருந்ததிலிருந்து தொடங்கி, பள்ளிப் படிப்பு, உயர் கல்வி, வேலை,மண வாழ்க்கை என்று கடந்து வந்த வாழ்க்கைப் பாதையைப் பின் நோக்குங்கால் பல முறை தெய்வீக ஆற்றல் வழி நடத்தியதை உணர முடிகிறது.  இந்நிகழ்ச்சிகள் நடுக்கும்போதொவெனில் நான் அவ்வாறு உணரவோ, தெய்வீக ஆற்றலுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவோ இல்லை! இந்நிகழ்ச்சிகளைத் தொகுத்து பகிர்ந்து கொள்வதன் மூலம் இவற்றைப் படிக்கும் மற்றவர்களும் தங்கள் வாழ்க்கையில் தெய்வாதீனம் என்று அடையாளம் காணக்கூடிய சம்பவங்களைக் கண்டு கொள்ளவும், வரும் காலத்தில் நிகழக்கூடிய தெய்வாதீனமான சம்பவங்களைப் புரிந்து இறைவனுக்கு நன்றி செலுத்தவும்  உதவும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

நிகழ்ச்சிகளை என் மனத்தில் மிகவும் ஆழமாகப் பதிந்த நிகழ்ச்சியில் தொடங்கி,  வரிசையாக நினைவுக்கு வரும் சம்பவங்களைக் கூறவிருக்கிறேன்.  பின்னால் புத்தக வடிவில் வெளியிடும் பொழுது இந்த வரிசையை மிகச் சிறு வயதிலிருந்து தொடங்கி நிகழ் காலம் வரை என்று மாற்ற எண்ணுகிறேன்.